SERIES 2
SERIES-2
மகாபலிபுரம்
சென்னையில் இருந்து அறுபத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மகாபலிபுரம் உள்ளது. இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். சென்னையில் இருந்து அடிக்கடி இங்கு சென்று வர தமிழ்நாடு அரசு பேருந்து வசதிகள் உண்டு. பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கலைச் சிற்பங்கள் நிறைந்த குடைவரைக் கோயில்கள் இங்கு அதிகமாக உண்டு.மகாபலிபுரத்திற்கு மாமல்லபுரம் என்றும் அர்த்த சேதுபுரம் என்றும் பிற பெயர்களும் உண்டு. பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.இக்கோயிலில் உள்ள மூலவரான ஜலசயனப் பெருமாள் புஜங்க சயன கோலத்தில் தரையில் படுத்து கிழக்கு நோக்கியவாறு கடற்கரையில் சேவை தந்தருளுகிறார். இவரது வலது கரமானது அவரது மார்பின் மீது வைக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரம், ஊரில் உள்ள கோயில், கடற்கரை கோயில் ஆகிய மூன்றிலுமே மூலவர்களாகப் பெருமாளே சேவை தருகின்றார். கலங்கரை விளக்கத்திற்கு மேற்குத் திசையில் உள்ள குடைவரைக் கோயில் ஒன்றில் வராக மூர்த்தியாக சேவை தருகின்றார்.
ஊரில் உள்ள கோயிலில் இருக்கும் உற்சவ மூர்த்திக்கு **உலகுய்ய நின்றான்** என்ற பெயராகும். தாயார் **நிலமங்கை** என்ற நாமத்தைப் பெற்றுள்ளார். மகாபலி இப்பகுதியில் ஆட்சி புரிந்ததாகவும் வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாளிடம் மகாபலி கேட்டுக் கொண்ட வரத்தின் காரணமாய் இவ்வாறு மகாபலிபுரம் என்றழைக்கப்படுவதாகக் கூறுவதும் உண்டு.
புண்டரீக மகரிஷி கடற்கரையில் பெரிய நந்தவனம் ஒன்றினை அமைத்து, அங்கு மலர்ந்திருந்த தாமரை மலர்களை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு இருந்த பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்ய புறப்பட்டபோது கடல் தடையாக இருந்ததாம். என்றுமே வற்றாத தன்மையை உடைய கடலினை வற்ற வைக்க புண்டரீக மகரிஷி கடல் நீரினை தம் கையால் வாரி வாரி இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட எம்பெருமான் அவர் மீது இரக்கம் கொண்டு மகரிஷியின் முன்பாக கிழவனாகத் தோன்றினார்.
தனக்கு பசியாக இருக்கிறது என்றும் பசியாற உணவும் அருந்த சிறிது தண்ணீரும் கொடுத்து உதவினால் மகரிஷியுடன் தானும் சேர்ந்து கடல் நீரை இறைத்திட உதவுவதாகக் கூறினார். கிழவரின் சொல் கேட்ட மகரிஷி ஊருக்குள் சென்று உணவும், தண்ணீரும் கொண்டு வந்தார்.
கடற்கரைக்கு வந்தபோது கிழவரைக் காணாமல் திகைத்தார். ஆனால் கடல் நீரானது வற்றி பாற்கடலுக்குச் செல்லும் வழியும் திறந்து இருந்தது. அங்கு எம்பெருமானாகப்பட்டவர் மகரிஷி தமக்கு அர்ப்பணம் செய்ய எடுத்து வந்த தாமரை மலர்கள் சூட்டப்பட்டு தரையில் படுத்த கோலத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் மகரிஷிக்கு சேவை தந்தருளினார். இது **தலசயன வரலாறு** ஆகும்.கலங்கரை விளக்கத்துக்கு அடுத்துள்ள கோயிலில் வீற்றிருக்கும் ஆதிவராக மூர்த்திக்கும் ஒரு தல வரலாறு. கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இப்பகுதியை அரிகேசன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். தினந்தோறும் ஆதிவராகப் பெருமாளை வணங்கிய பின்பே தனது உணவை உட்கொள்வார். ஒரு நாள் ஸ்வாமியை வணங்கிட மன்னர் புறப்பட்டபோது, எம்பெருமானார் முதியவர் உருவம் கொண்டு பசியாற உணவு கேட்டார்.
வராகசேகரனும் ஸ்வாமி வழிபாடு முடிந்ததும் உணவு வழங்குவதாகக் கூறினார். ஆனால் முதிய வடிவம் கொண்ட எம்பெருமானோ தனக்கு அச்சமயமே உணவு வழங்கிட வேண்டும் என்று கேட்டு காலம் தாழ்த்தினார். ஆதிவராகப் பெருமாளை மன்னர் வழிபடும் நேரமும் வந்தது. செய்வதறியாது திகைத்த மன்னர் முதியவரையே வராகமூர்த்தியாகப் பாவித்து அவருக்குச் செய்திட வேண்டிய ஆராதனையைச் செய்தார்.இது கண்டு உவகை கொண்ட எம்பெருமான் பூமாதேவியை தனது வலப்பக்கமாகக் கொண்டவாறு எழுந்தருளி அருள் செய்ததாகக் கூறப்படுகிறது.இக்கோயிலின் விமானம் **தகனாக்ருதி விமானம்** ஆகும். புண்டரீக புஷ்கரணி இத்தலத்தின் புஷ்கரணி ஆகும். ஊருக்குள் இருக்கும் கோயிலை விஜயநகர மன்னர் பராங்குசர் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது.
திருவிடந்தை
மகாபலிபுரத்தில் இருந்து பதினோரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் திருவிடந்தை ஆகும். சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் நாற்பத்திரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இங்குள்ள கோயிலில் உள்ள மூலவரின் பெயர் **லட்சுமி வராக மூர்த்தி** ஆகும். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை செய்யும் திருப்பதி ஆகும். இங்கு உள்ள தாயார் **கோமளவல்லி நாச்சியார்** ஆவார். உற்சவ மூர்த்தி **நித்திய கல்யாணப் பெருமாள்** என்றும் தாயார் **கோமளவல்லி நாச்சியார்** என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு ஆண்டாள், அரங்கநாதர், அரங்கநாயகி ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
சரஸ்வதி நதிக்கரையில் உள்ள சம்புத் தீவில் காலவ என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு பெண் பணிவிடைகள் செய்து வந்தாள். முனிவர் வீடு பேறு அடைந்ததும் அப்பெண்ணாகப்பட்டவள் கடுந் தவம் செய்தாள். அவ்வழியே வந்த திரிலோக சஞ்சாரி நாரதர் திருமணம் ஆகாத பெண்ணுக்கு வீடு பேறு கிட்டாது என்று அப்பெண்ணுக்கு எடுத்துரைத்தார்.இது கேட்ட அப்பெண் முனிவர் பலர் இருக்குமிடம் சென்று தன்னை யாராவது மணம் புரிந்திட வேண்டினாள். இவளது வேண்டுகோளைக் கேட்ட காலவ முனிவர் இப்பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.
ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாக காலவ முனிவருடன் நடத்திய இல்லறத்தின் பயனாய், முன்னூற்று அறுபது பெண்மக்களை திருமகளின் அம்சமாக இப்பெண் பெற்றெடுத்தாள். முடிவில் இப்பெண் வீடு பேறு அடைந்தாள்.பிறந்த பெண்கள் அனைவரும் கன்னிப் பருவம் அடைந்தபோது அனைவருக்கும் வரன் கிடைத்திடாது காலவ முனிவர் பெருங்கவலை அடைந்து திருவிடந்தைத் தலத்திற்கு வந்து ஆதிவராக மூர்த்தியை வழிபட்டதால் ஸ்வாமியே நாளுக்கு ஒருவராக முன்னூற்று அறுபது நாட்களில் அனைவரையும் மணந்தார். கடைசி அத்திகிரியை உத்தரவேதியாக வைத்து பிரம்மா அஸ்வமேத யாகம் செய்தார். அப்போது யாகத்தில் இருந்து தோன்றிய புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி எம்பெருமான் வரம் அளித்தபடியால் **வரதராஜன்** என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் குகை விமானத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கும் யோக நரசிம்மரே முதன் முதலாக இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
நூறுகால் மண்டபத்திற்கு வடபுறமாக அமைந்துள்ள சேஷ தீர்த்தம் இருக்கும் பகுதியில் தான் ஆதிசேஷன் தவம் புரிந்த இடமாகக் கூறப்படுகின்றது. இதன் நடுவில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபத்தின் அடிப்பகுதியில் இருக்கும் மாடத்தில் அத்திமரத்தால் செய்யப்பட்ட **அத்திவரத பெருமாள்** ஜல சயனத்தில் உள்ளார்.நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை சேஷதீர்த்தத்தில் உள்ள நீரினை முற்றிலுமாக வெளியேற்றி அத்திவரதரை கோவிலுக்கு கொண்டுவந்து ஒரு மண்டல பூஜை புனஸ்காரங்கள் அனைத்தும் செய்து மீண்டும் மாடத்தில் வைத்து சேஷ தீர்த்தத்தில் நீரை நிரப்பி விடுகின்றனர்.
இக்கோயிலின் புஷ்கரணி, வேகவதி நதி, சேஷவராக, பத்ம, அக்னி, குசல தீர்த்தங்கள் ஆகியவை ஆகும்.விமானம் **புண்ணிய கோடி விமானம்** ஆகும். பக்தர்கள் மேல கோபுர வாசல் வழியாகத்தான் கோயிலுக்குள் செல்கின்றனர். நீண்டு உயர்ந்த தூண்களும், அழகிய கோபுரமும், நான்கு கால் மண்டபமும், திருமஞ்சன மண்டபமும், மகா மண்டபமும், மகா மரியாதை வாசலும் இக்கோயிலில் உள்ளன.
நூறுகால் மண்டபத்தில் நான்கு புறத்திலும் வெகு நுட்பமாக அமைக்கப்பட்ட கல் சங்கிலிகள் தொங்குகின்றன. இங்கு குதிரைகள், குதிரை வீரர்கள், யாழிகள், ரதி மன்மதன் சிலைகள் அழகுடன் திகழ்கின்றன. அருகிலேயே ரம்யமான நந்தவனமும் உண்டு.தமிழ் இலக்கியங்களில் இத்தலத்தை **காஞ்சி, காஞ்சிபுரம், திருக்கச்சி** என்றும் **கச்சிப் பேடு** என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment