108 திவ்யஸ்தலம் SERIES-1

                                                              108 திவ்யஸ்தலம் 

                                                                      SERIES-1




திருவல்லிக்கேணி 

                தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருக்கும் திருவல்லிக்கேணியில் அமைந்திருப்பது பார்த்தசாரதி கோயிலாகும். இக்கோயிலானது வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், வேங்கடவன், தொண்டைமானுக்கு பார்த்தசாரதியாக சேவை அளித்த தலமும் ஆகும். இத்தலத்திற்கு பஞ்ச வீரத் தலம் என்ற பெயரும் உண்டு. இக்கோயிலில் இருந்த யானைதான் மகாகவி பாரதியாரை தன் காலால் மிதித்தது.இக்கோயிலில் ஐந்து சந்நிதிகள் இருக்கின்றன. மூல சந்நிதியில் உள்ள மூலவரின் நாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும். இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக மூலவர் சேவை தருகின்றார். தன்னுடைய மனைவி, தமையன், இளையோன், புதல்வன், பேரன் என்று மூன்று தலைமுறையினருடன் சேவை தருவது தனிச் சிறப்புடையது ஆகும்.பாரதப் போருக்கு முன்பாக கௌரவரின் தலை மகனான துரியோதனனுக்கு எதிராய் ஆயுதம் ஏந்துவது இல்லை என்ற வாக்கிற்கு ஏற்ப இவரது வலது கரத்தில் சக்கராயுதம் காணப்படவில்லை. ஆனால் இடது கையில் இருக்கும் சங்கானது வலது கரத்தில் இருக்கிறது. தேரோட்டியான பார்த்தசாரதி முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். ஆனால் முகத்தில் விழுப்புண்கள் உள்ளன. இவை பாரதப் போரின் போது ஏற்பட்டவை ஆகும். இடைப் பகுதியில் வாள் ஒன்று தொங்குகிறது. இன்னொரு கையில் சாட்டை காணப்படுகின்றது. இவ்வாறாக தேரின் முன்பாக நின்ற கோலத்தில் தோன்றுகின்றார். தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைக்கு இணங்க வேங்கடவன் இங்கு சேவை தந்தருளிய காரணமாய் “வேங்கட கிருஷ்ணன்” என்ற திருநாமம் பெற்றார்.

    இரண்டாம் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை தருகிறார். இவருக்கு மனநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தாயாருக்கு வேதவல்லி என்று பெயர். திருவல்லிக்கேணியில் முன்பொரு காலத்தில் துளசிச் செடிகள் மண்டிக் கிடந்தனவாம். இப்பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருந்திருக்கிறது. இங்கு ஒரு வந்தன மரத்தின் அடியில் தாயார் குழந்தை வடிவெடுத்துத் தோன்றியதாகவும் அக்குழந்தையை பிறகு முனிவர் எடுத்துச் சென்று வேதவல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்ததாகவும் திரு நாராயணன் இராஜ குமாரனாக உருவெடுத்து வந்து தாயார் வேதவல்லியை மணம் புரிந்து இத்தலத்திலேயே தங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

    மூன்றாவது சந்நிதியில் தனது வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகின்றார். இவரது மறுபெயர் தேவப்பெருமாள் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதியாகும்.

    நான்காவது சந்நிதியில் மேற்குப்புறமாக நோக்கியபடி நரசிம்மர் வீற்றிருக்கும் கோலத்தில் சேவை தருகிறார். நரசிம்மரின் சந்நிதிக்கு அடுத்த படியாக ஆண்டாள் சந்நிதி உள்ளது.

    ஐந்தாவது சந்நிதியில் தெற்கு நோக்கியபடி சக்ரவர்த்தி திருமகனாக ஸ்ரீ ராமர் நின்ற கோலத்தில் சேவை தருகின்றார். மூலவருடன் சீதாப் பிராட்டியார், பரதன், இலக்குமன், சத்ருக்கனன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர்.இந்த ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் ஐந்து பேரும் மங்களாசாசனம் பெற்றிருப்பதால் இத்தலத்திற்கு பஞ்சமூர்த்தி தலம் என்ற பெயரும் உண்டானது.

    திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களாலும், பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.இக்கோயிலில் உள்ள அல்லிக்கேணி புஷ்கரணி தீர்த்தத்தில் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு தீர்த்தங்கள் ஐந்தும் சூழ்ந்திருப்பதாக கூறுவது உண்டு. கோயில் குளத்தில் அல்லி மலர்கள் அதிகமாய் இருந்தபடியால் அல்லிக்கேணி என்ற பெயர் பெற்றது.

    இக்கோயிலில் முன் மண்டபங்கள் முதலில் உள்ளன. அடுத்து மகாமரியாதை மண்டப வாயில் உள்ளது. இதன் மீது இராசகோபுரம் அமைந்துள்ளது.ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட கோபுரம் சில வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள ஐந்து விமானங்கள் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் ஆகும்.

            

திருநீர்மலை  

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பல்லவரம் வழியில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலமே திருநீர்மலை ஆகும். மலை அடிவார கோயிலாகவும் மலை மேல் உள்ள கோயிலாகவும் உள்ளது.மலையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து இருந்த காரணத்தினால் திருநீர்மலை என்ற பெயர் உண்டானது. இத்தலத்தில் நான்கு கோலங்களில் பெருமாள் சேவை தருகின்றார். மலை மீது உள்ள கோயிலில் கிடந்த கோலத்துடன் அரங்கநாதனாகவும், இருந்த கோலமாக நரசிம்மராகவும் நடந்த கோலமாக திரிவிக்கிரமனாகவும், மலை அடிவாரத்தில் உள்ள கோயிலில் ஸ்ரீ இராமராகவும் சேவை தருகின்றார். இராமபிரானுடன் சீதாப் பிராட்டியார், பரதன், இலக்குமணன், சத்ருக்கனன், சுக்ரீவன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர். மூலவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை தருகின்றார்.

    இக்கோயிலில் மங்களாசாசனம் செய்தவர்கள் திரு மங்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஆவர். முன்னவர் பத்தொன்பது பாசுரங்களும் பின்னவர் இருபது பாசுரங்களும் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.இக்கோயிலின் புஷ்கரணியின் பெயர் மணிகர்ணிகா ஆகும். க்ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, சித்த புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி ஆகிய நான்கு தீர்த்தங்களும் இதில் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. நீர்மி மண்டபத்துடன் காணப்படும் இக்குளக் கரையில் வளர்ந்த மண்டபமும் உள்ளது


    

Comments

Popular posts from this blog

When Dance Becomes Story: The Soul of Abhinaya in Bharatanatyam”

Karunai – The Rasa of Kindness, Sorrow, and Humanity